டெல்லி: ஜியோ செல்போன் சேவை நிறுவனத்தின் சார்பில் மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் புதிய திட்டத்துக்கு இந்திய தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தடைவிதித்துள்ளது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்தது.
முதலில் டிசம்பர் 31- ஆம் தேதி வரை இன்டர்நெட் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக கொடுத்தது. பின்னர் அச்சலுகையை மார்ச் 31-ம் தேதி வரை அந்நிறுவனம் நீட்டித்தது. ஜியோவின் இந்த சலுகைகளால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஜியோ பிரைம் திட்டத்தை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி அத் திட்டப்படி,அளவில்லா கால் பெற ரூ. 99 கட்டணமும், அளவில்லா டேட்டா சேவையை பயன்படுத்த ரூ. 303 கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட 20 சதவித கூடுதல் டேட்டாவை ஜியோ வழங்கும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதில் பலர் இணைந்துள்ள நிலையில் மேலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சம்மர் சர்பிரைஸ் என்ற புதிய திட்டத்தை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதன்படி மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. 303 ரூபாய் அல்லது அதற்கு மேல் உள்ள திட்டங்களில் ஏப்ரல் 15க்குள் இணைந்தால் அவர்களுக்கு 3 மாதம் இணையதள சேவை இலவசம் என ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த திட்டத்தை திரும்ப பெறுமாறு இந்திய தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஜியோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் இத்திட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்த அந்நிறுவனம் இன்னும் சில நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ConversionConversion EmoticonEmoticon