சென்னை: தமிழகம் முழுவதும் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க 15 ஆயிரம் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர். வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 41 நாள்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு நாளை நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலின், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்களது கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசவுள்ளதால் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புங்கள் என்று கேட்டு கொண்டார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் நேற்றிரவு ரயில் ஏறினர். நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் இவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் விவசாயிகள் கடுமையாக போராடியும் மத்திய அரசு கண்டு கொள்ளாததால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் நாளை நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon